கல்வி முறைமை (Education System) நேற்று, இன்று, நாளை


கல்வி முறைமை (Education System) என்ற கப்பல் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டைத் தாண்டி 21ஆம் நூற்றாண்டில் நுழைந்து எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருகிறது.
இந்தப் பயணத்தில், கப்பலை நகர்த்துவது எது? இந்தக் கப்பல் விசேடமானது. இதை நகர்த்துவதற்கு பல உந்துசக்திகள் பங்களிப்புச்செய்கின்றன.
முதலாவது உந்துசக்தி "காற்று" (Wind) இந்த உந்துசக்தியை 21ஆம் நூற்றாண்டின் அழுத்தங்கள் என்று அடையாளப்படுத்தலாம். உதாரணமாக; சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அனைத்துவிதமான மாற்றங்கள், பொருளாதாரம், தொழில்நுட்பம் என்று கல்வி முறைமையில் தாக்கம் செலுத்தும் அனைத்தும்.
இரண்டாவது உந்துசக்தி "The Propeller - கப்பலை முன்னோக்கிச் செலுத்தும் இயக்குறுப்பு" இந்த சக்தியை "கல்விக் கொள்கை" என்று அடையாளப்படுத்துவோம். இது எங்களை மாற்றத்தை நோக்கி நகர்த்தலாம், சிலசமயம் வேகமாகவும், இன்னும் சில நேரங்களில் மெதுவாகவும், மேலும் சிலவேளைகளில் காற்றடிக்கும் திசையிலும், ஒருவேளை பிழையான திசையிலும் (அல்லது பின்னோக்கியும்) நகர்த்தலாம்.
மூன்றாவது உந்துசக்தி The oars - "துடுப்புகள்"
கப்பலில் உள்ளவர்களின் (கல்வி முறையில் உள்ளவர்கள்) அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் மட்டுமல்லாது முழுச் சமூகத்தினதும் செல்வாக்குகள் இதில் அடங்கும். இன்னுமொரு வார்த்தையில் சொல்வதென்றால் கல்வி முறைமையில் அக்கறையுள்ள சகல தரப்பினரும் கல்வி என்றால் என்னவென்று கொண்டுள்ள கருத்தும் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் தான் கல்வி முறையை நகர்த்தும் துடுப்புக்கள். இவர்கள் எதிர்த்திசைகளில் கப்பலை நகர்த்த முயற்சி மேற்கொள்வதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு குழு கப்பலை துறைமுகத்துக்கு நகர்த்த முயற்சி செய்யும்போது அடுத்த குழு கப்பலை வலப்புறம் திருப்ப முயற்சி செய்யும். அல்லது முதல் மற்றும் இரண்டாவது உந்துசக்திகளின் தாக்கத்தை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் இடையூறுகள் ஏற்படுத்தப்படும்.
இந்தப் படத்தில் இன்னும் இரண்டு முக்கிய விடயங்கள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று நங்கூரம் மற்றயது மிதவைகள் (buoys).
கல்வி முறைமை தொடர்பாக நாம் உரிமையாக்கிக் கொண்ட சில கருத்துக்கள் நங்கூரத்தின் மூலம் உருவமைக்கப்பட்டுள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் அழுத்தங்களாலும் அதனடியாக வகுக்கப்பட்ட கல்விக் கொள்கையாலும் கல்வி முறைமையை நகர்த்திச் செல்ல எடுக்கப்படும் முயற்சிகள் நங்கூரமாக செயல்படும் கருத்துக்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன அல்லது சீர்குலைக்கப்படுகின்றன.
அனைத்து மாணவர்களும் ஒரேமாதிரியான பெறுபேற்றைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவ்வாறானதொரு கருத்துக்கு உதாரணமாகும். ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி பொறிமுறையில் ஒரே மாதிரியான பொருள் உற்பத்தி செய்யப்படுவது போன்று கல்விச் செயன்முறையின் மூலம் அனைவரும் ஒரேமாதிரியான அடைவை அடைய முடியும் என்ற கருத்து புதிய முன்னெடுப்புக்களை சீர்குலைப்பதில் பிரதான் பங்கு வகிக்கிறது.
கப்பலுக்கு முன்னாள் உள்ள மிதவைகள் கல்வியின் எதிர்கால அபிலாஷைகளை குறித்துக்காட்டுகின்றன. எப்படியான இளம் சந்ததி ஒன்றை உருவாக்கக்கூடியதாக கல்வி இருக்க வேண்டும், காலத்துக்குப் பொருத்தமான கல்வி இலக்குகளும் கருத்துக்களும் மிதவைகள் மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. உதாரணமாக; "வாழ்நாள் கல்வியில் ஆர்வமுள்ளவர்களை உருவாக்குதல்", "சுறுசுறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கம்" "21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்பவர்களாக மாணவர்களை விருத்தி செய்தல்" போன்ற அபிலாஷைகள்.